NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மூவரின் கட்டுப்பாட்டுக்குள் கட்சி – கட்சிக்குள் வந்த சிக்கல்!

அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது தமிழக வெற்றிக் கழகம் தான்’ என்ற பிரகடனத்துடன், தமிழக அரசியலில் கால் பதித்துள்ளார் நடிகர் விஜய். ஆனால், அதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை என, ஆர்வத்தோடு களம் இறங்கிய ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தோர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

மேல் மட்டத்தில் இருக்கும் மூவர், விஜய் உள்ளிட்ட மொத்த கட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், கட்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் நிற்பதாக, புலம்பித் தீர்க்கின்றனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது, அரசியல் ஆர்வம் காரணமாக, தன் ரசிகர்களை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திட்டமிட்டு தயார்படுத்தினார் விஜய். ரசிகர் மன்றமாக இருந்ததை நற்பணி மன்றமாக்கி பின், மக்கள் மன்றமாக்கினார். அவ்வப்போது ரசிகர் மன்ற ஆட்களை சென்னைக்கு வரச்சொல்லி, அவர்களை சந்தித்து பேசுவதோடு, அவர்களுக்கு வயிறு நிறைய சாப்பாடு போட்டு, பரிசுகள் கொடுத்து அனுப்பி வைத்தார்.

ரசிகர் மன்றத்தினரை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும், ‘இது அரசியல் கட்சியாகும்; மன்றத்தில் இருப்போருக்கே கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படும். ‘போட்டியிடும் வாய்ப்பிலும் முன்னுரிமை இருக்கும். ஓய்வின்றி மக்கள் பணி செய்ய வேண்டும்’ என்று உற்சாகப்படுத்தி அனுப்புவார். அதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு, பலரும் கைக்காசை செலவு செய்து, இரவு, பகலாக செயல்பட்டனர்.

அரசியல் கட்சிகளுக்கு இணையாக, விஜய் மக்கள் மன்றம் வாயிலாக நலத்திட்ட உதவிகள் தரும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால், பெரிய விளம்பரம் எதுவும் இன்றி, மக்களிடம் மன்றம் நேரடியாக போய் சேர்ந்தது.

சொன்னது போலவே, விஜய் மூன்று ஆண்டுகளில் கட்சி துவக்கி விட்டார். ஆனால், மக்கள் மன்றத்தில் இருந்தோரில் ஒரு சிலருக்கு மட்டுமே பதவிகள் வழங்கி, முக்கியத்துவம் கொடுத்தார். மாநில நிர்வாகிகள் பலர் நியமிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோரால் வேகமாக செயல்பட முடியவில்லை. கட்சியில் இருவர் மட்டுமே பிரதானமாக இருந்து, விஜயை தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டு செயல்படுகின்றனர்.

மாநில அளவில் முக்கியஸ்தராக இருக்கும் முன்னாள் மக்கள் பிரதிநிதியும், வியூகம் வகுத்துக் கொடுக்கும் நபரும் மட்டுமே, விஜய் மீது தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி, விஜயை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த இருவர் தவிர, மூன்றாவதாக ஒரு நபர் இருக்கிறார்.

அவர் வருமான வரித்துறையில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி. இவர்கள் மூவரும் என்ன நினைக்கின்றனரோ, அதை மட்டுமே விஜயால் செயல்படுத்த முடிகிறது. அதிலும் மாநில அளவில் முக்கியஸ்தராக இருக்கும் நபர், தன்னைப் பற்றி பெருமையாக நடிகர் விஜய் நினைக்க வேண்டும் என்பதற்காக, கட்சியின் கீழ் நிலையில் இருக்கும் தொண்டர்களை விட்டு கட்சி தலைமையகத்துக்கு கடிதம் எழுத வைக்கிறார்.

அக்கடிதத்தில், மாநில முக்கியஸ்தரின் செயல்பாடுகளைப் புகழ்ந்து எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதங்களை மட்டும் விஜய் பார்வைக்கு கொண்டு செல்கின்றனர். அதைப் படித்து விட்டு மாநில முக்கியஸ்தரை விஜய் ஏகமாக பாராட்டுகிறார்.

மொத்தத்தில், சுதந்திரப் பறவையாக இருந்து, தமிழக மக்களை ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக சென்று சந்தித்து, கட்சியை வளர்க்க வேண்டிய விஜயை, வீட்டுக் கிளியாக முடக்கிப் போட்டுள்ளனர். மூவரையும் கடந்து, வெளியாட்கள் யாருமே விஜயை சந்திக்க முடியவில்லை.

இதனால், தி.மு.க., – அ.தி.மு.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் முக்கிய தலைவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முயற்சித்தும் முடியாத நிலை உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் பிரதான பெண் முகமாக இருந்தவர், சீமான் மீதான வெறுப்பில் த.வெ.க.,வில் இணைய முயற்சித்தார். இணைவதற்கு முன் விஜயை சந்தித்து பேச விரும்பினார். மும்மூர்த்திகள் தடை ஏற்படுத்த, அ.தி.மு.க., பக்கம் செல்லத் தயாராகி விட்டார்.

இதையெல்லாம் மீறி, நாம் தமிழர் கட்சி தலைமை மீதான அதிருப்தியில் ஒதுங்கி இருந்த தலைவர் ஒருவர், விஜயை எப்படியோ சந்தித்து விட்டார். இந்தத் தகவல் மூவரணிக்குத் தெரியவர, அதற்கு உதவிய இரண்டாம் கட்டத் தலைவர்களை அழைத்து கடிந்து கொண்டுள்ளனர்.

சமீபத்திய புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, நிவாரண உதவி அளிக்க விஜய் விரும்பினார். ‘நீங்கள் நேரடியாக சென்றால், மக்கள் சூழ்ந்து கொள்வர்; பெரிய பிரச்னையாகி விடும்’ என்று சொல்லி தடுத்ததோடு, பாதிக்கப்பட்ட மக்களை பனையூருக்கு பஸ்சில் அழைத்து வந்து, நிவாரண உதவிகளை வழங்க வைத்தனர்.

இப்படித்தான் பயனில்லாத யோசனைகளை கொடுத்து வருகின்றனர். அதோடு, கட்சிக்கு மா.செ., உள்ளிட்ட நிர்வாகிகள் நியமித்து, மாநிலம் முழுதும் நிர்வாக கட்டமைப்பை இதுவரை ஏற்படுத்தவில்லை. இப்படியே இருந்தால், வரும் 2026 சட்டசபை தேர்தலை, வலுவான கட்சியாக எதிர்கொள்ள முடியாது என்று கூறினர்.

Share:

Related Articles