யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு இடம்பெற்ற தென்னிந்திய பாடகரின் இசைநிகழ்ச்சி முறையான ஒழுங்குபடுத்தல் இன்மையால் ஏற்பட்ட குழப்பத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்பாட்டாளர்களின் ஒழுங்கீனம் மற்றும் பொலிஸாரின் பற்றாக்குறை காரணமாகவும் கட்டுக்கடங்காத பார்வையாளர்கள் மேடைக்கு அருகில் கூடியதாலும் இந்த இசைநிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது
25,000 ரூபா அனுமதிச்சீட்டு, 7000 ரூபா அனுமதிச்சீட்டு, 3000 ரூபா அனுமதிச்சீட்டு கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்ந்து பார்வையிடவும் அதற்கு பின் இலவசமாக நின்றவாறு நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் பெரும்பாலான கூட்டம் அனுமதிச் சீட்டுகள் இல்லாமல் நுழைந்ததால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
முதியவர்கள், கைக்குழந்தைகளோடு வந்த பலர் பணத்தை செலுத்தியும் ஆசனங்களின்றி நின்றபடி இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய அவலம் காணப்பட்டதாக பலரும் விசனம் தெரிவித்தனர்.
பெருமளவு தென்னிந்திய நட்சத்திர கலைஞர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தபோதிலும் போதிய அளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் தடுப்புகள் உடைக்கப்பட்டு பலர் குறுகிய இடத்திற்குள் நுழைந்ததுடன், பணம் செலுத்தியும் கதிரைகள் இல்லாது நின்ற பார்வையாளர்கள் மீது மோதிக்கொண்டதால் பலர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
அத்தோடு, குறுகிய இடத்துக்கு ஏற்பட்ட சன நெரிசலினால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனால், பார்வையாளர்களில் ஒருவர் மயக்கமடைந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.