வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று காலை புதன் கிழமை (04.12.2024) இடம்பெற்றது.
கடந்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் ஐ.எல்.ஓ. அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ளதாகவும் ஆலோசகர் தோமஸ் கிரிங் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு வடக்கு மாகாண சபையால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களுக்கும், ஆளுநருக்கு நன்றி கூறினார்.
மாவட்டச் செயலராக கடந்த காலங்களில் நான் பணியாற்றியபோது முன்னெடுக்கப்பட்ட திட்டங்களைப்பற்றி நன்கு அறிவேன் எனக் குறிப்பிட்ட ஆளுநர், மக்கள் அவற்றால் பயனடைந்தனர் எனவும் சுட்டிக்காட்டினார். ஐ.எல்.ஓ. உதவியில் சில திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இயங்கிய பின்னர் அவற்றின் செயற்றிறன் குறைந்தமை தொடர்பில் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் இங்கு குறிப்பிட்டார்.
மேலும் வடக்கிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு எதிர்காலத்தில் உதவுவதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் ஆராயுமாறும் ஆளுநர் கேட்டுக்கொண்டார். போர் காலத்துக்கு முன்னர் வன்னிப் பெருநிலப் பரப்பில் அமைந்துள்ள மிகப்பெரிய குளங்கள் ஊடாக பல்வேறு பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தற்போது அவை நெற் பயிர்ச்செய்கையுடன் மாத்திரம் முடங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதனால் ஏற்றுமதி வாய்ப்புக்கள் குறைவடைந்துள்ளன எனவும் குறிப்பிட்டார்.
எனவே ஏற்றுமதிப் பொருளாதாரத்தை இலக்குவைத்து மீண்டும் பல்வகை பயிர்ச்செய்கைகளை வன்னிப் பிராந்தியத்தில் முன்னெடுப்பதற்குரிய வகையில் உதவுவதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் ஆராயுமாறும் கேட்டுக்கொண்டார்.
தற்போதைய அரசாங்கம் ஏற்றுமதிப் பொருளாதாரத்திலேயே ஆர்வமாக இருப்பதையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். தற்போதைய காலகட்டமே வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மிகப்பொருத்தமான சந்தர்ப்பம் என்பதைக் குறிப்பிட்ட ஆளுநர் அதற்கு உதவுமாறும் கோரிக்கை முன்வைத்தார்.