NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விஞ்ஞானிகளின் சாதனையில் பிரதமர் மோடி புகழ் தேடுகின்றார் : காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு !

”சந்திரயான்-3 திட்டம்‘ வெற்றியடைந்துள்ள நிலையில், விஞ்ஞானிகளின் சாதனையில் பிரதமர் மோடி புகழ் தேடுகின்றார்” என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ” சந்திரயான்-3, நிலவில் தரையிறங்கிய பெருமையும், உற்சாகமும் இன்னும் நீண்ட காலத்துக்கு நம்முடன் இருக்கும்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் தலைமை, உண்மையிலேயே வரலாறு படைத்து விட்டது. அவருக்கும், அவருடைய குழுவினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதே சமயத்தில், போலி வேடம் போடும் பிரதமர் மோடி, சில கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். லேண்டர் தரையிறங்கியவுடன், நீங்கள் அவசரமாக திரையில் தோன்றினீர்கள். அந்த பெருமையை தட்டிச் சென்றீர்கள். ஆனால், உங்கள் அரசு இஸ்ரோவுக்கும், விஞ்ஞானிகளுக்கும் ஆதரவாக இருக்க மறுப்பது ஏன்?

சந்திரயான்-3 திட்டத்தில் பெரும்பங்காற்றிய பொறியியலாளர்களுக்கு 17 மாதங்களாகச் சம்பளம் வழங்காதது ஏன்? இதுபோன்ற முக்கியமான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 32 சதவீதம் குறைத்தது ஏன்? உலகத்தரம் வாய்ந்த விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களை அவர்கள் நடத்தி வந்த போதிலும், அவர்களின் திறமை மற்றும் கடின உழைப்பை நீங்கள் மதிக்கவில்லை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், விஞ்ஞானிகளின் சாதனையில் நீங்கள் புகழ் தேடுகிறீர்கள்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles