NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வீட்டு வேலைக்கு பணியமர்த்தப்பட்ட சிறுமி மர்ம முறையில் உயிரிழப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மாதாந்தம் 25,000 ரூபா கொடுப்பனவுக்காக வீட்டுவேலை செய்து வந்த 17 வயதுடைய சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் கடந்த 26ஆம் திகதி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் யாழ்ப்பாணத்தின் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் – வட்டுக்கோடை முதலியார் கோவில் ஆதி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சிறுமிக்கு கல்வியில் ஈடுபடுவதற்கு போதிய பண பலம் இல்லாத காரணத்தினால் அவரது தாயார் யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றில் வேலைக்குச் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாதாந்த வாடகையாக 25000 ரூபா தருவதாக உறுதியளித்த போதிலும் வீட்டின் உரிமையாளர் மாதாந்தம் 5000 ரூபாவையே வழங்கியுள்ளார். சிறுமியை பார்க்க தாய்க்கு தடை விதித்த முதலாளி, மாதத்திற்கு 3 நிமிடம் மட்டுமே தொலைபேசியில் உரையாடுவதற்கு வாய்ப்பளித்துள்ளார்.

சுமார் 4 மாதங்களாகியும் இவர்களுக்கு தொலைபேசியில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும், குறித்த வேலை வழங்குநர் திட்டமிட்டபடி சம்பளத்தை வழங்கவில்லை எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் தாயாருக்கு அவர் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து, இந்த மரணத்தில் தனக்கு பல சந்தேகங்கள் இருப்பதாக சிறுமியின் தாயார் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனையை மேற்கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, மரணம் தொடர்பில் வெளிப்படையான தீர்ப்பை வழங்கியதுடன், உயிரிழந்தவரின் உடல் பாகங்களை மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles