NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

12 இந்திய மீனவர்களுக்கு அபராதம்!

புத்தளம் கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில்; எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 22 இந்திய மீனவர்களில் 12 பேருக்கு தலா 20 மில்லியன் ரூபா வீதம் அபராத தொகையை செலுத்துமாறு புத்தளம் மாவட்ட நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

தவறும் பட்சத்தில் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு படகுகளில் தமிழகம் தூத்துக்குடியில் இருந்து வருகைத் தந்த 22 மீனவர்களில் 12 மீனவர்களுக்கே இவ்வாறு தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஏனைய 10 மீனவர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் புத்தளம் மாவட்ட மேலதிக நீதிவான் டி.எல்.ஏ.என். விமலரத்ன உத்தரவிட்டிருந்தார்.

குறித்த இந்திய மீனவர்கள் 22 பேரும் எல்லை தாண்டி புத்தளம் – கற்பிட்டி வடக்கு கடற்பகுதியில் மீன்பிடியில். ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இரவு கடற்படையிரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்கள் பயணித்த இரண்டு விசைப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சட்டவிரோதமாக இலங்கை எல்லைக்குள் நுழைந்தமை தொடர்பில் இந்த 22 இந்திய மீனவர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

இதன்போது சந்தேக நபர்களான இந்திய மீனவர்கள் 22 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட மேலதிக நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், சந்தேக நபர்கள் மீண்டும் நேற்று புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேக நபர்களான 22 இந்திய மீனவர்களில் 12 பேர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக, குறித்த 12 மீனவர்களுக்கும் தலா 20 மில்லியன் ரூபா வீதம் அபராத தொகையை செலுத்துமாறும், அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Share:

Related Articles