NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

14 வயது சிறுமியை பணத்திற்காக விற்பனை செய்த தாய் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

14 வயதான தனது மகளை பணத்திற்காக ஆண்களுக்கு விற்றதாக கூறப்படும் பெண்ணை நேற்று மாலை கைது செய்ததாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணத்தை கொடுத்து அந்த சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த சிறுமியின் தந்தை உயிரிழந்து விட்டதாகவும் சந்தேக நபரான பெண், ஆண்களை வீட்டுக்கு வரழைத்து 2 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டுக்குள் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய இடமளித்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் ஆண்களை வீட்டுக்கு வரவழைக்கும் இந்த பெண், வீட்டுக்கு வரும் ஆணையும் மகளையும் வீட்டுக்குள் வைத்து கதவுகளை மூடிவிட்டு காவலுக்கு இருந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

14 வயதான இந்த சிறுமி 10 ஆம் ஆண்டில் கல்வி கற்று வருவதுடன் தாயின் இந்த செயலை பொறுத்துக்கொள்ள முடியாது, கல்வி கற்று வரும் பாடசாலையில் ஆசிரியை ஒருவரிடம் சம்பவம் பற்றி கூறியுள்ளார்.

தாய் தன்னை சில மாதங்களில் பணத்திற்காக ஆண்களிடம் விற்றதாக சிறுமி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய அனைத்து நபர்களையும் கைது செய்வதற்காக திவுலப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்களான தாய் மற்றும் ஆணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Share:

Related Articles