பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்க கோரி அக்கரப்பத்தனை பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிக்கு அழுத்தம் கொடுத்து அக்கரப்பத்தனை பிரதேச தோட்டங்களில் ஒருமணிநேர அடையாள போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை காலை ஈடுப்பட்டனர்.
1700 ரூபாய் சம்பள உயர்வு தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டிருந்த வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவை வழங்க கோரி பெருந்தோட்ட நிறுவனங்கள் நீதிமன்றம் சென்று இடைக்கால தடை உத்தரவையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இம்மாதம் சம்பளத்தில் வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த 1700 ரூபாய் சம்பளம் வழங்கப்படாததால் தொழிலாளர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதேநேரத்தில் 1700 ரூபா சம்பளத்தை பெற்றே தீருவோம் மனம் தளரவேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஊடகங்கள் ஊடாக விசேட அறிவித்தலை (08) காலை விடுத்திருந்தார்.
அதையடுத்து தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்கள் கம்பனிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஒரு மணி நேரம் அடையாள பணி பகிஷ்கரிப்பில் முதற் கட்டமாக ஈடுப்பட்டு பின் வழமையான தொழிலுக்கு சென்றனர்.
அதேவேளை அக்கரப்பத்தனை சென்ரெகுலாஸ் தோட்டத்தில் தொழிலாளர்கள் கடும் மழையையும் பொருட்படுத்தாது பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.