45 கிலோ கிராம் வல்லப்பட்டையை சட்டவிரோதமாக காரில் கடத்திச் சென்ற ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவரை பாணந்துறை – வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அதன்படி, காரின் முன் தாமரை மலர் தட்டை வைத்துவிட்டு மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் விகாரைக்கு செல்வதாக கூறி சில தினங்களாக பொலிஸாரை தவறாக வழிநடத்தி குறித்த வல்லப்பட்டை கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நேற்றைய தினம் (01) குறித்த சந்தேக நபர் 45 கிலோ கிராம் வல்லப்பட்டையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருவளை ஹெட்டிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்டகாலமாக இவ்வாறான கடத்தலில் ஈடுபட்டு வந்த இவர், பண்டாரகம பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு இந்த வல்லப்பட்டைகளை கொடுத்து பல கோடி ரூபாவிற்கு வெளிநாட்டிற்கு கடத்தி வருவதும் தெரியவந்துள்ளது.
களுத்துறை வடக்கு கடற்கரை சந்தியில் காரை நிறுத்தி சோதனை செய்த குற்றத்தடுப்பு பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 கிலோ வல்லப்பட்டையை கண்டுபிடித்து காரை கைப்பற்றியதோடு குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.