NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி!


ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின.

லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி துடுப்பெடுத்தாடிய லக்னோ அணிக்கு ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி கோக் மற்றும் அணித் தலைவர் கே.எல். ராகுல் முறையே 19 மற்றும் 39 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 3 ஓட்டங்களுடனும், மார்கஸ் ஸ்டாயினிஸ் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ஓட்டங்களை குவித்தது. லக்னோ அணி சார்பில் ஆயுஷ் பதோனி சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 55 ஓட்டங்களை குவித்தார். டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இஷாந்த் சர்மா, முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா நல்ல ஆரம்பத்தைக் கொடுத்தார். 22 பந்துகளில் 32 ஓட்டங்களை குவித்த பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜேக் ஃபிரேசர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 35 பந்துகளில் 55 ஓட்டங்களை விளாசிய ஜேக் ஃபிரேசர் நவீன் உல் ஹக் பந்தில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய அணித் தலைவர் ரிஷப் பந்த் 24 பந்துகளில் 41 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

18.1 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2024 ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

லக்னோ சார்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் மற்றும் நவீன் உல் ஹக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles