ஐ.பி.எல் தொடரின் 38-வது லீக் போட்டியில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 65 ஓட்டங்களும் வதேரா 49 ஓட்டங்களும் குவித்தனர். ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான பட்லர்- ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ஓட்டங்கள் குவித்தது. அந்த நிலையில் சாவ்லா பந்து வீச்சில் பட்லர்(35) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சேம்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார்.
ஒரு முனையில் அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 183 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 104 ஓட்டங்களிலும் சாம்சன் 38 ஓட்டங்களிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் சாவ்லா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்த தோல்வியின் மூலம் 13-வது ஆண்டாக ஜெய்ப்பூரில் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை – ராஜஸ்தான் அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலுமே மும்பை அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.