சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் என்பது மிகப்பெரிய குற்றமாகும். அங்கு கஞ்சா 500 கிராம், ஹெராயின் 15 கிராமுக்கு மேல் கடத்தினாலே தூக்குத்தண்டனை வரை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது. இதனால் சிறிய அளவில் போதைப்பொருள் கடத்தினாலே தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில் சிங்கப்பூரில் வசிக்கும் சரிதேவி டிஜமானி என்ற பெண் 31 கிராம் ஹெராயின் கடத்தியதாக கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால் கடந்த 2018ம் ஆண்டு அவருக்கு தூக்குத்தண்டனை விதித்து அந்த நாட்டின் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து மேல்முறையீடு, அதிபரிடம் மன்னிப்பு கடிதம் போன்ற நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும் ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இந்த பெண்ணின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என சிங்கப்பூர் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் குறித்த சரிதேவி டிஜமானிக்கு நேற்று தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் 19 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவர் போதைப்பொருள் கடத்தியதற்காக நேற்று தூக்கிலிடப்பட்டு உள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு மே வொன் என்ற பெண் போதைப்பொருள் வழக்கில் தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.