(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கீரை தோட்டங்களில் பணிபுரியும் பெண்கள் மற்றும் நெல் போன்ற சேற்றுப் பகுதிகளில் காத்தாடி பறக்கவிடும் பிள்ளைகளுக்கு எலிக்காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தொற்றுநோயியல் துறை சமூக நிபுணர் வைத்தியர் துஷானி டபரேரா தெரிவித்துள்ளார்.
எலிக்காய்ச்சல் தொடர்பாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
தற்போதைய மோசமான வானிலையால், எலிக்காய்ச்சலுக்கான போக்கு அதிகரித்துள்ளது மற்றும் இந்த ஆண்டு 7000 எலிக்காய்ச்சல்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இதுவரை எலிக்காய்ச்சல் தொடர்பான 125 இறப்புகள் பதிவாகியுள்ளன.
கம்பஹா, குருநாகல், காலி மாத்தறை ஆகிய பகுதிகளில் எலிக்காய்ச்சல் அதிகமாக காணப்படுவதாகவும், இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள சுரங்கங்களில் பணிபுரிபவர்களுக்கு எலிக்காய்ச்சல் அபாயம் அதிகம் எனவும் நிபுணர் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
காய்ச்சல், தொண்டை வலி, கண்களில் மஞ்சள் நிறம் போன்ற அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு அவர் மக்களுக்கு அறிவுறுத்தியதுடன், வெள்ளம் காரணமாக, பல பகுதிகளில் எலிக்காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 5 சதவீதம் பேர் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழப்பதாகவும், நெற்பயிர்களில் இருந்து தண்ணீர் அருந்துவதையும் முகத்தை கழுவுவதையும் தவிர்க்குமாறும் சுகாதார திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நெற்பயிர் அறுவடையின் போது சம்பந்தப்பட்டவர்கள் 2 வாரத்திற்கு ஒருமுறையாவது எலிக்காய்ச்சலுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அதற்கான மருந்துகளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.