NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வவுனியாவில் மாணவனை தாக்கிய ஆசிரியை கைது…!

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் கடந்த 03 ஆம் திகதி பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில், மாணவனின் முகத்திலும், தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் மாணவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்கு கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார். 

இதற்கு பதில் அளித்த ஆசிரியை ‘உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தது என்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என்று கூறியதுடன், மகனுக்கு அடிக்காமல் கொஞ்சுவதா? என ஆசிரியர் கேட்டுள்ளார்.

கோபமடைந்த பெற்றோர் காயமடைந்த மாணவனை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்  அனுமதித்து சிகிச்சை வழங்கியதுடன், பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்தனர்.

இந்நிலையில் தாக்குதல் இடம்பெற்று நான்கு நாட்களின் பின்னர் வவுனியா,  ஈச்சங்குளம் பொலிஸார் இன்று (07) குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர். 

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த ஆசிரியரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை, இச் சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவினர், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவினர், வட மாகாண கல்வி திணைக்களத்தினர், வவுனியா வடக்கு கல்வி வலயத்தினர் ஆகியோரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles