NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

LPL 2023 தொடரில் துடுப்பாட்டத்தில் கலக்கியவர்கள் !

கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடைசி ஓவர் வரையிலான த்ரில் இறுதிப் போட்டியாக அமைந்து, அஞ்செலோ மெதிவ்ஸின் அதிரடியில் வனிந்து ஹஸரங்க தலைமையிலான பி-லவ் கண்டி அணி முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்ததுடன் லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 4ஆவது அத்தியாயம் நிறைவுக்கு வந்தது.

இந்த ஆண்டு LPL தொடரானது இலங்கைக்கும், இலங்கை கிரிக்கெட்டுக்கும் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த தொடராக அமைந்தது என்றால் மிகையாகாது. அதற்கு முக்கிய காரணம் கடந்த 3 அத்தியாயங்களைப் போன்றல்லாமல் மைதானம் நிறைந்த பார்வையாளர்கள், வெளிநாட்டு வீரர்களையும் மிஞ்சிய இலங்கை வீரர்களின் திறமைகள், முதல் தடவையாக புதிய 2 அணிகள் சம்பியன் பட்டத்துக்காக தெரிவாகியமை உள்ளிட்ட பல வியக்கத்தகு சம்பவங்கள் இம்முறை LPL தொடரில் அரங்கேறின.

குறிப்பாக, துடுப்பாட்டத்தை பொறுத்தவரை இலங்கை அணிக்காக ஆடி வருகின்ற ஒருசில முன்னணி வீரர்கள் இந்த ஆண்டு LPL தொடரில் மிகவும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி இருந்ததுடன் சாதனைகளையும் படைத்தனர். குறிப்பாக, இன்னும் இலங்கை அணியில் இடம் பிடிக்காத 24 வயதான லசித் குரூஸ்புள்ளே துடுப்பாட்டத்தில் அதிரடி காண்பித்து தேர்வாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருந்ததுடன், தொடரின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதையும் தட்டிச் சென்றார்.
இது இவ்வாறிருக்க, இந்த ஆண்டு LPL தொடரை முழு உலகிற்கும் கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றிய, அந்த தொடர் கிரிக்கெட் உலகின் அவதானத்தைப் பெறுவதில் முக்கிய வீரராக திகழ்ந்த பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாமும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தார். குறிப்பாக, இம்முறை LPL தொடரில் அடிக்கப்பட்ட ஒரேயொரு சதத்துக்கான கௌரவமும் பாபர் அசாமிற்கே கிடைத்தது.

இம்முறை போட்டித் தொடரில் ஒரேயொரு தடவை மாத்திரம் அணியொன்றால் 200 ஓட்டங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. கோல் டைட்டன்ஸ் அணிக்கெதிரான 12ஆவது லீக் போட்டியில் பி-லவ் கண்டி அணி, 203 ஓட்டங்களைக் குவித்தது. அதேபோல, கோல் டைட்டன்ஸ் அணிக்கெதிரான 20ஆவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 74 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதே குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையாகவும் பதிவாகியது. அதுதவிர ஒரு சதம், 27 அரைச் சதங்கள், 222 சிக்ஸர்கள், 589 பௌண்டரிகளும் இம்முறை போட்டித் தொடரில் பதிவாகின.

இதனிடையே, இந்த ஆண்டு LPL தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த முதல் 10 வீரர்களில் 7 பேர் இலங்கை வீரர்கள் ஆவர். எனவே, இந்த ஆண்டு LPL தொடரில் துடுப்பாட்டத்தில் அதிரடி காண்பித்து அதிக ஓட்டங்களைக் குவித்த முதல் 5 வீரர்கள் குறித்த பட்டியலை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

வனிந்து ஹஸரங்க (பி–லவ் கண்டி)

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் LPL தொடர் நடைபெற்றாலும் இந்த ஆண்டு LPL தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரருக்கு பச்சை நிற தொப்பி அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் நடப்பு LPL அத்தியாயத்தில் இந்த விருதை பி-லவ் கண்டி அணியின் தலைவரும், சகலதுறை வீரருமான வனிந்து ஹஸரங்க வென்றுள்ளார். இம்முறை LPL தொடரில் 10 போட்டிகளில் ஆடிய இவர் 279 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 2 அரைச் சதங்கள் அடங்கும். அவரது சராசரி 34.87 ஆகும். அதேபோல, 189.8 என்ற அதிக ஓட்ட வேகத்தைக் கொண்ட வீரராகவும் இடம்பிடித்தார்.
மேலும், 14 சிக்ஸர்களை விளாசி இம்முறை போட்டித் தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரராகவும், 29 பௌண்டரிகளை அடித்து அதிக பௌண்டரிகளை அடித்த வீரர்களில் 2ஆவது இடத்தையும் வனிந்து பிடித்தார்.

கோல் டைட்டன்ஸ் அணிக்கெதிரான 12ஆவது லீக் போட்டியில் 64 ஓட்டங்களை அடித்த அவர், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

குறிப்பாக இம்முறை LPL தொடரில் அதிவேகமாக அரைச் சதமடித்த வீரராகவும், அணித் தலைவராகவும் வனிந்து ஹஸரங்க இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

2020 இல் நடைபெற்ற அங்குரார்ப்பண LPL தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற அவர், இந்த ஆண்டு LPL தொடரிலும் துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகலதுறையிலும் பிரகாசித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

ஒட்டுமொத்தத்தில் இந்த ஆண்டு LPL தொடரில் துடுப்பாட்டத்தில் கலக்கிய வனிந்து ஹஸரங்கவிற்கு அதிக சிக்ஸர் விளாசிய வீரருக்கான விருது மற்றும் அதிக விக்கெட் எடுத்த வீரருக்கான விருது என மேலும் 2 விருதுகள் வழங்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

பாபர் அசாம் (கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ்)

இந்த ஆண்டு LPL தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக ஆடிய பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 2ஆவது இடத்தைப் பிடித்தார்.
இந்தப் பருவத்தில் 8 போட்டிகளில் விளையாடிய அவர் 261 ஓட்டங்களைக் குவித்துள்ளார். கோல் டைட்டன்ஸ் அணிக்கெதிரான 10ஆவது லீக் போட்டியில் அதிகபட்சமாக 104 ஓட்டங்களை குவித்த அவர், இம்முறை LPL தொடரில் சதமடித்த முதல் வீரராகவும், ஒரேயொரு வீரராகவும் இடம்பிடித்தார். அதுமாத்திரமின்றி, LPL தொடரில் சதமடித்த 4ஆவது வீரராகவும், 3ஆவது வெளிநாட்டு வீரராகவும் அவர் இடம்பிடித்தார்.

மேலும், ஒரு அரைச் சதத்தை மாத்திரம் அடித்த பாபர் அசாம், 7 சிக்ஸர்கள், 25 பௌண்டரிகள், விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பருவம் முழுவதும் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் ஆரம்பத்தில் இருந்து முதலிடத்தை பாபர் அசாம் பெற்றாலும், அந்த அணி பிளே ஒப் வாய்ப்பை இழந்ததால் 2ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார்.

தினேஷ் சந்திமால் (பி–லவ் கண்டி)

இம்முறை LPL தொடரில் பி-லவ் கண்டி அணிக்கு சம்பியன் பட்டம் வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த தினேஷ் சந்திமால், அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களில் 3ஆவது இடத்தைப் பிடித்தார்.

இம்முறை LPL தொடரில் பி-லவ் கண்டி அணிக்காக 3ஆம் இலக்க வீரராகக் களமிறங்கிய சந்திமால், லீக் போட்டிளைப் போல பிளே-ஓப் சுற்றிலும் நம்பிக்கை கொடுத்து ஓட்டங்களைக் குவித்தார்.

இதில் ஜப்னா கிங்ஸ் அணிக்கெதிரான எலிமினேட்டர் போட்டியில் 41 ஓட்டங்களையும், கோல் டைட்டன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 38 ஓட்டங்களையும் குவித்த அவர், தம்புள்ள ஓரா அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் 24 ஓட்டங்களையும் எடுத்திருந்தார். இதனிடையே, தம்புள்ள ஓரா அணிக்கெதிரான 19ஆவது லீக் போட்டியில் 50 ஓட்டங்களை எடுத்து இம்முறை LPL தொடரில் தனது முதல் அரைச் சதத்தை சந்திமால் பெற்றுக் கொண்ட போதிலும் அந்தப் போட்டியில் பி-லவ் கண்டி தோல்வியைத் தழுவியது.

இந்தப் பருவத்தில் 10 போட்டிகளில் ஆடிய தினேஷ் சந்திமால் 125.12 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 259 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 33 பௌண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். அதிலும் குறிப்பாக, இம்முறை LPL தொடரில் அதிக பௌண்டரிகளை விளாசிய வீரர்களில் முதலிடத்தையும் அவர் பெற்றுக்கொண்டார்.

எதுஎவ்வாறாயினும், LPL தொடர் வரலாற்றில் வெற்றிகரமான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கின்ற சந்திமால், கடந்த ஆண்டு நடைபெற்ற LPL தொடரில் இறுதிப் போட்டி வரை சென்று 2ஆவது இடத்தைப் பிடித்த அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்காக ஆடியிருந்தார்.
குறித்த தொடரில் ஒரு அரைச் சதமும், 3 தடவைகள் 30 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களையும் பதிவு செய்த சந்திமால், கடந்த ஆண்டு LPL தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களுக்கான பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். இதில் சிறப்பம்சம் என்னவெனில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவே அவர் அந்த தொடரில் விளையாடியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர்களில் ஒருவராக விளங்குகின்ற தினேஷ் சந்திமால், டெஸ்ட் அணியில் தொடர்ந்து ஆடி வந்தாலும், ஒருநாள் மற்றும் T20i அணிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும், இலங்கை அணியில் இளம் வீரர்கள் தொடர்ச்சியாக பிரகாசித்து வருவதால் ஒருநாள் மற்றும்T20i அணிகளில் தினேஷ் சந்திமாலுக்கு நிரந்தர இடம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஆனாலும், 33 வயதான சந்திமாலுக்கு இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ணம் மற்றும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தில் வாய்ப்பு கிடைக்காது என்பது தான் கிரிக்கெட் விமர்சகர்களின் நிலைப்பாடாகும்.

அவிஷ்க பெர்னாண்டோ (தம்புள்ள ஓரா)

LPLதொடரின் 4 அத்தியாயங்களினதும் இறுதிப் போட்டியில் ஆடிய ஒரேயொரு வீரர் என்ற பெருமையைப் பெற்றுக் கொண்ட அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ, இம்முறை LPL தொடரில் தம்புள்ள ஓரா அணிக்காக ஆடி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 4ஆவது இடத்தைப் பிடித்தார்.
LPL தொடரில் வெற்றிகரமான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்ற அவிஷ்க, LPL தொடரின் முதல் 3 அத்தியாயங்களிலும் ஜப்னா கிங்ஸ் அணிக்காக ஆடி அந்த அணிக்கு சம்பியன் பட்டம் வென்று கொடுப்பதில் முக்கிய பங்காற்றினார்.

2020 அங்குரார்ப்பண LPL தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் நான்காவது இடத்தையும், 2021ஆம் ஆண்டு அதே வரிசையில் இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்ட அவிஷ்க பெர்னாண்டோ, கடந்த ஆண்டு நடைபெற்ற LPL தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் முதலிடத்தைப் பிடித்தார்.

இந்த ஆண்டு தம்புள்ள ஓரா அணிக்காக ஆடிய அவிஷ்க பெர்னாண்டோ, 10 போட்டிகளில் ஆடி 125.12 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 244 ஓட்டங்களைக் குவித்தார். அத்துடன், 2 அரைச் சதங்களைப் பெற்றுக் கொண்ட அவர், 18 பௌண்டரிகளையும், 14 சிக்ஸர்களையும் விளாசியிருந்தார். எவ்வாறாயினும், பி-லவ் கண்டி அணிக்கெதிரான போட்டியில் 5 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

மோசமான போர்ம் காரணமாக இலங்கை ஒருநாள் மற்றும் T20i அணிகளில் இடம்பிடிக்க முடியாமல் தடுமாறி வருகின்ற அவிஷ்க பெர்னாண்டோவிற்கு இம்முறை LPL தொடரில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியவில்லை. இதனால் அவருக்கும் இலங்கை அணியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான்.

சதீர சமரவிக்ரம (தம்புள்ள ஓரா)

இந்த ஆண்டு LPL தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களில் 5ஆவது இடத்தை தம்புள்ள ஓரா அணியின் சதீர சமரவிக்ரம பெற்றுக் கொண்டார்.

இம்முறை LPL தொடரில் 10 லீக் போட்டிகளில் விளையாடிய சதீர, ஒரு அரைச் சதத்துடன் 234 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 30 பௌண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். இவர் 30க்கும் அதிகமான ஓட்டங்களை 4 தடவைகள் விளாசியிருக்கிறார். குறிப்பாக தம்புள்ள ஓரா அணிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும், 3ஆம் இலக்க வீரராகவும் அவர் விளையாடி ஓரளவு நம்பிக்கை கொடுத்திருந்தார்.

கடந்த ஆண்டு LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்கு சம்பியன் பட்டம் வென்று கொடுப்பதில் முக்கிய காரணமாக இருந்த வீரர்களில் சதீர சமரவிக்ரமவிற்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக கடந்த ஆண்டு LPL தொடரில் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்ற சதீர, அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். ஆனால் இந்த ஆண்டு LPL தொடரில் துடுப்பாட்டத்தில் பின்னடைவை சந்தித்து 5ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்காக தொடர்ச்சியாக ஆடி வருகின்ற சதீர சமரவிக்ரமவிற்கு இலங்கை T20i அணியில் இடம்பிடிப்பதற்கு இம்முறை LPL தொடரில் வெளிப்படுத்திய திறமை போதுமானதாக உள்ளதாக என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

இதனிடையே, இம்முறை LPL தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 5 முதல் 10 வரையான இடங்களில் முறையே கோல் டைட்டன்ஸ் வீரர் லசித் குரூஸ்புள்ளே (232 ஓட்டங்கள்), கோல் டைட்டன்ஸ் வீரர் டிம் சைபேர்ட் (231 ஓட்டங்கள்), தம்புள்ள ஓரா வீரர் குசல் மெண்டிஸ் (220 ஓட்டங்கள்), பி-லவ் கண்டி வீரர் மொஹமட் ஹரிஸ் (213 ஓட்டங்கள்), தம்புள்ள ஓரா வீரர் குசல் ஜனித் பெரேரா (210 ஓட்டங்கள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles