LPL தொடரின் நடப்புச் சம்பியன்களாக காணப்படும் Jaffna Kings அணி இந்தமுறை தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானின் சகலதுறைவீரர் சொஹைப் மலிக் மற்றும் ஷமான் கான் ஆகியோரினை ஒப்பந்தம் செய்திருந்தது.
எனினும் இந்த வீரர்களில் சொஹைப் மலிக் LPL தொடரின் முதல் சில போட்டிகளில் ஆடமாட்டார் என்றும், ஷமான் கான் சொந்த காரணங்கள் காரணமாக LPL தொடரிலிருந்து விலகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில் இந்த வீரர்களின் பிரதியீடாக இரண்டு வெளிநாட்டு வீரர்கள் புதிதாக அவ்வணியில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.
புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள வீரர்களில் பங்களாதேஷினைச் சேர்ந்த தௌஹீத் ரித்தோய் முதல் வீரராக அமைய இரண்டாவது வீரராக தென்னாபிரிக்காவினைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் நன்ட்ரே பேர்கர் அமைகின்றார்.
இந்த வீரர்களில் தௌஹீத் ரித்தோய் ஜப்னா கிங்ஸ் அணியில் சொஹைப் மலிக்கின் பிரதியீடாக மாறி தொடரின் முதல் சில போட்டிகளில் ஆடுவார் எனக் கூறப்பட்டிருக்கின்றது. அதோடு, நன்ட்ரே பேர்கர், ஷமான் கானின் பிரதியீடாக மாறியிருக்கின்றார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் பெற்றிருந்த 22 வயது நிரம்பிய தௌஹீத் ரித்தோய், அறிமுக ஒருநாள் போட்டியில் அதிகூடிய ஓட்டங்கள் (92) பெற்ற பங்களாதேஷ் வீரராக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.