இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை குறித்து இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை பயணிப்பார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரிடையே இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வெளியுறவு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுச் செயலாளர் மற்றும் இந்திய அரசின் உயர் அதிகாரிகள் பலரும் இந்த விஜயத்தில் கலந்துக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த விஜயம் நாடுகளுக்கு இடையிலான வழக்கமான உயர் மட்ட ஈடுபாடுகளின் ஒரு பகுதியாகும், மேலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பன்முக கூட்டாண்மையை ஆழப்படுத்துவதில் மேலும் உத்வேகத்தை அளிக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.