NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம்..!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஓவர்களை வீசிமுடிக்க தவறியதால், ஐசிசி ஒருநாள் சுபர் லீக்கிலிருந்து ஒரு புள்ளியை இலங்கை அணி இழந்துள்ளது.

இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடருக்கு நேரடியாக தகுதிபெறுவதற்கு இலங்கை அணிக்கு தங்களுடைய ஐசிசி சுபர் லீக் புள்ளிகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்ட பின்னர், 82 புள்ளிகளுடன் 9வது இடத்தை இலங்கை அணி பிடித்திருந்தது.

எனினும் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஒரு ஓவரை வீச தவறியுள்ளதாக போட்டி மத்தியஸ்தர் குறிப்பிட்டுள்ளார். எனவே ஐசிசி சுபர் லீக் புள்ளிப்பட்டியலில் இருந்து ஒரு புள்ளியினை இலங்கை அணி இழக்க நேரிட்டுள்ளது. அதேநேரம், வீரர்கள் அனைவருக்கும் அவர்களுடைய போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதமாக அறவிடப்பட்டுள்ளது.

ஒரு புள்ளியை இழந்துள்ள இலங்கை அணி 81 புள்ளிகளுடன் உள்ள நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றால் 91 புள்ளிகளை பெற்றுக்கொள்ளும்.

இவ்வாறு 91 புள்ளிகளை பெற்றுக்கொண்டாலும் தற்போது 78 புள்ளிகளுடன் உள்ள தென்னாபிரிக்க அணி அடுத்து நடைபெறவுள்ள நெதர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகளையும் வெற்றிக்கொண்டால், நேரடி தகுதியை பெற்றுக்கொள்ளும். எனவே இலங்கை அணிக்கான வாய்ப்பு பறிபோகும்.

மேலும் தென்னாபிரிக்க அணியானது நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டியிலும், அயர்லாந்து அணியானது (68 புள்ளிகள்) பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியிலும் தோல்வியடைய வேண்டும். இவ்வாறு தோல்வியடைந்தால் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று இலங்கை அணியால் உலகக்கிண்ணத்துக்கு நேரடி தகுதியை பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கை அணியானது ஐசிசி சுபர் லீக்கில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஓவர்கள் வீச தவறியமைக்காக 3 புள்ளிகளை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles