பாடகி உமாரா சிங்ஹவன்ச தேசிய கீதத்தை தவறான முறையிலேயே பாடியுள்ளதாக இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஆரம்ப நிகழ்வின் போது பாடகி உமாரா சிங்ஹவன்ச தேசிய கீதத்தில் “மாதா” என்பதற்கு பதிலாக “மஹதா” என்று பாடியதாக குற்றம் சுமத்தப்பட்டது .
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
மேற்படி குழுவின் உறுப்பினர்களாக உள்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் விசாரணை அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாடகி உமாரா சிங்ஹவன்ச மற்றும் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் வாக்குமூலங்களை மேற்படி குழு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் படி, தேசிய கீதத்தின் தொடர்புடைய வசனங்களை நடுத்தர தொனியில் பாட வேண்டும்.
ஆனால் பாடகி உமாரா அதை தவறாக பாடியிருப்பதையும் விசாரணைக்குழு உறுதி செய்துள்ளது.
மேலும், இதற்கு முன்னர் இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஆரம்ப விழாவிலும் அவர் தேசிய கீதத்தை “மாதா”விற்கு பதிலாக “மஹதா” என பாடியதாக விசாரணை குழு தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்போது அவர் ஒரு குழுவுடன் சேர்ந்து தேசிய கீதத்தை பாடியதாகவும் கூறப்படுகிறது.
விசாரணைக் குழு இது தொடர்பான அறிக்கையை கடந்த 18ஆம் திகதி பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளது.
சட்டமா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம், பாடகி உமாரா சிங்ஹவன்ச அரசியலமைப்பை மீறி தேசிய கீதத்தை பாடியமை தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசாரணைக்குழு தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.