கிழக்காசிய மற்றும் பசிபிக் நாடுகளில் வாழும் 243 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை கவலைத் தெரிவித்துள்ளது.
கடுமையான வெப்பத்தால் உடல்நலம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் மரணம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் மாதங்களில் கிழக்காசிய மற்றும் பசிபிக் நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவு வெப்பநிலை பதிவாகும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
வெப்பத்தை தாங்கும் சக்தி குழந்தைகளுக்குக் குறைவு, அதனால் பிள்ளைகள் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படலாம் என்று ஐ.நா. கூறுகிறது.
குழந்தைகளைக் காக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தென்கிழக்காசியாவிலும் வெப்பம் கடுமையாக உள்ளது. தாய்லாந்தில் இதுவரை இரண்டு பேர் வெப்ப தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பீன்சிலும் சில நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வீடுகளில் இருந்தே படிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.