NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குறைந்த விலை மதுபான அறிமுக முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு!

குறைந்த விலையில் மதுபானத்தை அறிமுகப்படுத்துவதற்கு கலால் ஆணையாளர் நாயகம் கொண்டு வந்த யோசனை தொடர்பில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சட்டவிரோத மதுபானத்தை குறைப்பேன் என்ற போர்வையில் மதுவின் விலையை குறைத்து நாட்டு மக்களின் மது பாவனையை அதிகரித்து நிறுவனங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒரு நாடு மதுபானம் மற்றும் சிகரெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அதன் மீதான வரியை உயர்த்த வேண்டும் என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மது அருந்துபவர்கள் உட்கொள்ளும் மதுவின் அளவைக் குறைப்பதற்கும் புதிதாக மது பயன்பாட்டிற்கு செல்வதைக் கட்டுப்படுத்தவும் மது வரிகளை அதிகரிப்பதுதான் ஒரு பயனுள்ள உத்தி என்பதை உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட இது தொடர்பாக ஆய்வு நடத்தும் நிறுவனங்களும் அறிவியல் பூர்வமாக உறுதி செய்துள்ளதாகவும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தையில் கலால் வரி செலுத்தாமல் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை கண்டறிந்து, தொடர்புடைய மோசடி வர்த்தகர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் அவ்வாறான சூழ்நிலைகள் ஏற்படாமல் தடுப்பதும் கலால் ஆணையாளர் நாயகத்தின் பொறுப்பாகும் என அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles