(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
எதிர்வரும் பெரும்போகத்தில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு நிலத்தை தயார் செய்வதற்காக ஏக்கருக்கு 20,000 ரூபா வழங்குவதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை, மொனராகலை, அநுராதபுரம், அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு இந்த தொகையை மீளச் செலுத்த முடியாத தொகையாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், மக்காச்சோள பயிர்ச்செய்கைக்கு தேவையான அனைத்து விதைகள் மற்றும் உரங்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
கால்நடை தீவனத்தை தயாரிப்பதற்கு தேவையான சோளம் பற்றாக்குறையால் பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி இந்த வருடத்தில் குறைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.