ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் ஊடாக நாட்டிற்கு பல நிதி உதவிகள் கிடைக்கும் எனவும், 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நாட்டில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் சீன ஜனாதிபதி நாட்டிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் கட்டுமானத்திற்கு ஆதரவளிப்பதாக சீன ஜனாதிபதி கலந்துரையாடலின் போது தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையின் பல்வேறு திட்டங்களுக்கு 500 மில்லியன் யுவான் நிதியுதவி சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் எனவும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.