(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கையில் டெங்கு அபாயம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் டெங்குவை கட்டுப்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய வீடுகளில் அல்லது வணிக வளாகங்களில் டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 43,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 5 மாதங்களில் 26 பேர் டெங்கு தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் தீவிரமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகம் 2 குழுக்களையும் நியமித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவான டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.