(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
யாழ்ப்பாணம் – நல்லூர் திருவிழாவை முன்னிட்டு கல்கிசையிலிருந்து கொழும்பு – காங்கேசன்துறைக்கு விசேட புகையிரத சேவை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த புகையிரதம் சுமார் 3 வாரங்களுக்கு இயக்கப்படும் என்றும், பொதுமக்களின் தேவையைப் பொறுத்து இந்தச் சேவை தொடரலாம் என்றும் புகையிரத திணைக்கள செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
வடக்கு நோக்கிச் செல்லும் 10 குளிரூட்டப்பட்ட பெட்டிகள் தொலைக்காட்சி வசதிகளுடனும், 4,000 ரூபா கட்டண அறவீட்டுடன் வழங்கப்படவுள்ளது.
பயணிகள் இணையத்தளத்தின் ஊடாக முன்பதிவு செய்ய முடியும் என்பதுடன், பயணிகளுக்கு உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பு – கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் யாழ். தேவி புகையிரதத்தில், அடுத்த 2 வாரங்களுக்கு ஆசனங்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக இலங்கை புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
மாஹோ – ஓமந்தை இடையிலான வடக்கு புகையிரத பாதையின் 128 கிலோமீற்றர் பகுதியில், தர மேம்படுத்தல் பணி முடிவடைந்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம் முதல் மீண்டும் வடக்குக்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது, கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயண நேரம் ஒன்றரை மணிநேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.