புத்தாண்டின் பின்னர் முதன்முறையாக பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடவுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், ஜனவரி 30, 2023 திகதியிட்ட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உத்தரவு இன்று விவாதிக்கப்பட உள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியளிப்பு வசதியின் கீழ் இந்த ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதம் நாளை ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி நாளை முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு விவாதம் நடைபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை சமர்பிப்பது இன்னும் சில வாரங்கள் தாமதமாகியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நன்மைக்காகவே ஜனாதிபதி இவ்வாறான கட்டளைகளை கொண்டு வருகின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.