பாடசாலை அதிபர் ஒருவர் சத்துணவு திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் உணவை வழங்க, பெண்ணொருவரிடம் லஞ்சம் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனையடுத்து, குறித்த அதிபரை லஞ்ச, ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட எஹலியகொட பெருந்தோட்ட பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஹலியகொட பெருந்தோட்டத்தில் வசிக்கும் பெண்ணொருவர், குறித்த பாடசாலைக்கான சத்துணவை தொடர்ச்சியாக வழங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு தொடர்ச்சியாக உணவை வழங்க வேண்டும் என்றால், மாதாந்தம் 50,000 ரூபாவை தனக்கு வழங்குமாறு, பாடசாலை அதிபர் குறித்த பெண்ணிடம் கோரியுள்ளார்.
இதன்படி, அதிபருக்கு கடந்த 05ம் திகதி, குறித்த பெண் 20,000 ரூபாவை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், எஞ்சிய 30,000 ரூபாவை பெற்றுக் கொள்ள முற்பட்ட போதே, குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை அவிசாவளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த லஞ்ச, ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.