NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முடிவுக்கு வரும் வோர்னரின் பயணம்!

2024 T20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் தனது முடிவினை அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அண்மையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள 37 வயதான டேவிட் வோர்னர் தற்சமயம் T20 போட்டிகளிலும் ஓய்வு பெறும் தீர்மானத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

செவ்வாயன்று பேர்த்தில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகளுடான மூன்றாவது டி20 ஆட்டத்தின் பின்னர் டேவிட் வோர்னர் இந்த முடிவினை அறிவித்தார்.

அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வோர்னர் வெளிப்படுத்தி வரும் போதிலும், இளைஞர்களுக்கு களம் அமைத்து கொடுப்பதற்காக தான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் கூறினார்.

மேலும், தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், வரவிருக்கும் ஐ.பி.எல். மற்றும் டி20 உலகக் கிண்ணத்துக்கு தயாராகுவதற்குமான ஆயர்த்தத்தையும் வோர்னர் இதன்போது வெளிப்படுத்தினார்.

மேற்கிந்தியத்தீவுகளுடான மூன்றாவது போட்டியில் வோர்னர் மொத்தமாக 49 பந்துகள‍ை எதிர்கொண்டு அதிரடியாக 81 ஓட்டங்களை பெற்றார்.

அதேநேரம் குறித்த தொடரின் ஆட்டநாயகன் விருதினையும் அவர் பெற்றுக் கொண்டார்.

ஓய்வு குறித்து அறிவித்தாலும் வோர்னர், இந்த மாத இறுதியில் ஆரம்பமாகும் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்காக நியூசிலாந்திற்குச் செல்வார்.

மேலும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் கரீபியனில் ஆரம்பமாகவுள்ள 2024 டி20 உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலிய அணியில் உள்வாங்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகளுடான அண்மைய 3 T20 போட்டிகளில் டேவிட் வோர்னர் இரண்டு அரைசதங்களுடன் 173 ஓட்டங்களை எடுத்தார்.

இந்தத் தொடரில் வோர்னர் 3000க்கும் மேற்பட்ட T20 ஓட்டங்களை எட்டிய ஏழாவது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை பெற்றார்.

அதேநேரம், ஹோபார்ட்டில் நடந்த முதல் T20 போட்டியில், விராட் கோலி மற்றும் ரோஸ் டெய்லருக்குப் பின்னர், ஒவ்வொரு வடிவ சர்வதேச போட்டிகளிலும் 100 ஆட்டங்களை விளையாடிய மூன்றாவது வீரர் ஆனமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles