(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நகர்ப்புற காதலையும் அதைச் சுற்றி நடக்கும் சிக்கல்களையும் கூறும் மொடர்ன் லவ் சென்னை இன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இதில் மூன்றாவது படமாக இடம்பெற்றிருப்பது கிருஷ்ணகுமார் ராம்குமாரின் ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கற எமோஜி’
சிறு வயது முதல் டிவியில் காதல் படங்களாக பார்த்து சினிமா பைத்தியம் பிடித்து, அதில் வருவது போல காதலித்தே தீர வேண்டும் என்ற இலட்சியத்துடன் மல்லிகா (ரிது வர்மா) உள்ளார்.
சினிமாவில் குறிப்பாக தமிழ் காதல் படங்களில் வரும் ஹீரோயின்கள் போல தன்னை கற்பனை செய்து கொண்டு தனக்காக காதலைத் தேடுகிறார். புhடசாலை வாழ்க்கையில் ஒரு காதல், கல்லூரி வாழ்க்கையில் ஒரு காதல் என அவரது அடுத்தடுத்த காதல்கள் தோல்வியை தழுவுகின்றன. இறுதியில் தனது இலட்சியத்தை நாயகி அடைந்தாரா என்பதற்கான விடையே ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கற எமோஜி கதையாகும்.
கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை ரிது வர்மாவை சுற்றியே கதை நகர்கிறது. காதலை தேடித் திரியும் பெண்ணின் பார்வையிலிருந்து வரும் ஒரு கதையாகும். எனினும் ஒரு திரைப்படத்துக்கு தேவையான அழுத்தமான பாத்திரப் படைப்புகளோ, திரைக்கதையோ இல்லாமல் தனித் தனி காட்சிகளின் தொகுப்பு போல நகர்கிறது.
மல்லிகாவாக ரிது வர்மா பொருத்தமாக உள்ளார். ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங் உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை. படத்தின் இறுதியில் வரும் வைபவ் மட்டும் விதிவிலக்காக உள்ளார். ஜி.வி.பிரகாஷின் இசையும் பாடல்களும் கவனிக்க வைக்கின்றன.
தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு காதல் தோல்வி பாடல்கள் இல்லாதது குறித்து நாயகி பேசுவது, காதலியிடம் நீங்க என்ன ஆளுங்க என்று காதலன் கேட்பது போன்ற ஒரு சில காட்சிகள் இரசிக்க வைத்தாலும், ஒரு முழு படமாக ஈர்க்க தவறுகிறது.