NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடகி பவதாரிணி உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்

இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் அவர் உயிரிழந்தார்.

இசை விழா ஒன்றுக்காக இலங்கை சென்றிருந்த இளையராஜாவுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆஸ்பத்திரிக்கு சென்று பவதாரணியின் உடலை பார்த்து கண் கலங்கினார்.

47 வயதே ஆன பாடகி பவதாரணியின் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து நேற்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பவதாரணியின் உடலை அவரது சகோதரர் கார்த்திக் ராஜா மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மாலை பவதாரணியின் உடல் சென்னை தியாகராய நகர் முருகேசன் தெருவில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அங்கு பவதாரணியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதைப்போல நடிகர்கள் சிவகுமார், ராமராஜன், விஷால், கார்த்தி, சிம்பு, விஜய் ஆண்டனி, விஷ்ணு விஷால், சதீஷ், ஆனந்த்ராஜ், உதயா, விஜய்யின் தாயாரும், பாடகியுமான ஷோபா சந்திரசேகர், காயத்ரி ரகுராம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், மணிரத்னம், மிஷ்கின், லிங்குசாமி, ஆர்.கே.செல்வமணி, எழில், வெங்கட் பிரபு, வெற்றிமாறன், சீனு ராமசாமி, சுதா கொங்கரா, சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், கவிஞர் முத்துலிங்கம் உள்ளிட்ட பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பவதாரணியின் மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தெலுங்கு முன்னணி நடிகரும் ஜனசேனா கட்சித்தலைவருமான பவன் கல்யாண் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பொதுமக்கள் அஞ்சலியை தொடர்ந்து, பவதாரணியின் உடல் இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று (சனிக்கிழமை) அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.பவதாரிணியின் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles