NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரண்டு கட்சி தலைவர்களுக்கு மட்டும் தளபதி விஜய் வாழ்த்து கூறியதால் பரபரப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் தமிழகத்தில் உள்ள இரண்டு கட்சியின் தலைவர்களுக்கு மட்டுமே தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு இதுவரை தளபதி விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

ஆனால் அண்டை மாநிலத்தில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்த விஜய் தற்போது நாம் தமிழர் கட்சிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட இரண்டு கட்சிகளும் மாநில அந்தஸ்தை பெறும் வகையில் வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளதால், அந்த இரண்டு கட்சிகளுக்கும் விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விஜய் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே விஜய் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டு இந்த இரண்டு கட்சிகளுடன் அவர் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Share:

Related Articles