NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கல்கி 2898 ஏடி படம் எப்படி

ஹாலிவுட்டில் பல ஆண்டுகளாக பிழிந்து கசக்கி தூக்கி எறியப்பட்ட டிஸ்டோபியன் பாணி திரைப்படங்கள் இந்தியாவில் கிட்டத்தட்ட எடுக்கப்பட்டதே கிடையாது எனலாம்.

‘கல்கி 2898 ஏடி’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வெளியானபோது இந்திய சினிமாவில், குறிப்பாக தெலுங்கு சினிமாவிலிருந்து ஹாலிவுட் பாணியில் ஒரு டிஸ்டோபியன் திரைப்படம் வருகிறது என்பதே சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

காரணம், இப்படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின். 2021-ல் நெட்ப்ளிக்ஸில் வெளியான ‘பிட்டா கதலு’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எக்ஸ் லைஃப்’ என்ற சயின்ஸ் ஃபிக்சன் படத்தில் தொழில்நுட்பரீதியாகவும், திரைக்கதையிலும் ஆச்சர்யப்படுத்தியிருந்தார்.

கமல்ஹாசன், அமிதாப் என பெரும் சினிமா ஜாம்பவான்கள் இடம்பெற்றதாலும் ‘கல்கி 2898 ஏடி’ படம் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருந்தது. இப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.

மகாபாரத்தின் குருஷேத்ர போருக்குப் பிறகு கிருஷ்ணரின் சாபத்தால் சாகாவரம் பெறுகிறார் அஸ்வத்தாமா (அமிதாப் பச்சன்). நம்முடைய காலத்திலிருந்து சுமார் 874 ஆண்டுகள் கழித்து நடக்கும் கதையில் பெரும்பாலான மனிதகுலம் காசி நகரத்தில் தஞ்சமடைகிறது.

பூமியின் வளங்களை மொத்தமாக உறிஞ்சும் ‘காம்ப்ளெக்ஸ்’ என்ற பிரம்மாண்ட முக்கோணத்தை தவிர மற்ற இடங்கள் அனைத்தும் பாலைவனமாக மாறிவிட்டன.

அந்த காம்ப்ளக்ஸ் என்ற இடத்தை உருவாக்கி 200 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார் சுப்ரீம் யஸ்கின் என்னும் கொடுகோலன் (கமல்ஹாசன்). அந்த காம்ப்ளக்ஸ் அமைப்புக்குள் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்று துடிக்கிறார் பைரவா என்னும் ஒரு பவுன்ட்டி ஹன்ட்டர் (பிரபாஸ்).

காம்ப்ளக்ஸ் உள்ளே பல பெண்களை அடைத்து வைத்து அவர்களுக்கு செயற்கை முறையில் கருவை உருவாக்கி அதிலிருந்து ஒரு ரகசிய திரவத்தை எடுக்க முயன்று கொண்டிருக்கிறார் யஸ்கின். அஸ்வத்தாமா, யஸ்கின், சுமதி (தீபிகா படுகோன்), பைரவா ஆகியோரின் பாதைகள் ஏதோ ஒரு வகையில் ஒன்றோடு ஒன்று குறுக்கிடுகின்றன. யஸ்கின் செய்யும் அந்த ரகசிய செயல்பாடு என்ன? அஸ்வத்தாமாவின் நோக்கம் என்ன? – இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘கல்கி 2898 ஏடி’.

சந்தேகமே இல்லாமல் தொழில்நுட்ப ரீதியாக இப்படம் இந்திய சினிமாவில் ஒரு பெரும் பாய்ச்சல்தான் என்று சொல்லவேண்டும். ஹாலிவுட்டில் பார்த்து வியந்த தத்ரூபமான கிராபிக்ஸ் இப்படத்தில் முழுமையாக சாத்தியமாகியிருக்கிறது.

எத்தனை கோடி செலவு செய்தாலும் இந்திய படங்களின் கிராபிக்ஸில் ஒருவித ப்ளாஸ்டிக் தன்மை இருப்பது புரியாத புதிராகவே இருந்தவந்தது. அந்தக் குறை ‘கல்கி’ படத்தின் மூலம் தீர்ந்திருப்பது சிறப்பு.

ஆனால், திரைக்கதை ரீதியாக மார்தட்டி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இப்படம் வந்திருக்கிறதா என்றால், இல்லை என்பதே பதிலாகும். ரூ.600 கோடியை கொட்டி பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள ஒரு திரைப்படத்தில் திரைக்கதைக்கு குறைந்தபட்ச உழைப்பைக் கூட செலுத்தவில்லை என்பதை என்ன சொல்வது? என்னதான் மேக்கிங்கில் நேர்த்தியை காட்டியிருந்தாலும், படத்தின் காட்சியமைப்புகளில் புதிதாக ஒன்றுமே இல்லை.

‘ஸ்டார்ட் வார்ஸ்’, ‘ட்யூன்’, ‘மேட்ரிக்ஸ்’, ‘ப்ளேட் ரன்னர்’, சில மார்வெல் படங்கள் என கலந்து கட்டி ஒரு முழுநீள படமாக கொடுக்க முயற்சித்துள்ளார் நாக் அஸ்வின். ஆனால், அது வெறும் முயற்சியாகவே நின்றுபோய் விட்டது ஏமாற்றம். படம் தொடங்கி முதல் பாதி முழுவதுமே எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் செல்கிறது. ஹீரோ என்ட்ரியே மிகவும் சலிப்பான ஒரு நீளமான சண்டைக் காட்சி. இதுபோல பல நீ….ள, நீ….ள காட்சிகள் படம் முழுக்க படுத்தி எடுக்கின்றன.

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் சில நல்ல ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றாலும், அவை ஒரு கட்டத்துக்கு ஓவர் டோஸ் ஆகிவிடுகின்றன. அதன் பிறகு ஷம்பாலா என்ற நகரத்துக்கு செல்வது, அங்கு நடக்கும் காட்சிகள் என மீண்டும் திரைக்கதை தொங்க ஆரம்பித்து விடுகிறது.

முந்தைய படங்களில் பிரபாஸிடம் இருந்த ஒருவித இறுக்கம் இந்தப் படத்தில் இல்லை. முடிந்தவரையில் தன்னுடைய ஸ்க்ரீன் ப்ரசன்ஸை கலகலப்பாக கொடுக்க முயன்றிருக்கிறார்.

கிட்டத்தட்ட இப்படத்தில் அவர் ஒரு நீட்டிக்கப்பட்ட கேமியோ கதாபாத்திரம் என்றுதான் சொல்லவேண்டும். அடுத்து திரையில் ஆதிக்கம் செலுத்துபவர் அமிதாப் பச்சன். நீண்ட தாடி, பிரம்மாண்ட 8 அடி உயரத்துடன் தீபிகாவை காப்பாற்ற அவர் போராடும் காட்சிகள் ஈர்க்கின்றன.

படத்தின் மெயின் வில்லன் கமல்தான் என்றாலும் படத்தில் மொத்தமே இரண்டே காட்சிகள்தான். ஆனால், அதிலும் தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, க்ளைமாக்ஸில் அவருடைய டிரான்ஸ்பர்மேஷன் வெறித்தனம்.

தீபிகா படுகோன், பசுபதி, ஷோபனா, அன்னா பென், சஸ்வதா சாட்டர்ஜி ஆகியோர் தங்கள் பங்கை குறையின்றி செய்திருக்கின்றன.

இந்திய சினிமாத் துறையே சின்னச் சின்ன கேமியோக்களில் படம் முழுக்க வருகின்றன. அவை இல்லையென்றாலும் படத்தில் எந்த தாக்கமும் இருந்திருக்காது என்றாலும், தொய்வாக சென்றுகொண்டிருக்கும் திரைக்கதையில் இந்த கேமியோக்கள்தான் ஆறுதல்.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்தை பல இடங்களில் காப்பாற்ற முயல்கிறது. சில இடங்களில் ‘கர்ணன்’ படத்தின் இசை ஞாபகத்து வருவதை தடுக்க இயலவில்லை.

பாடல்கள் சுமாருக்கும் கீழே என்று சொன்னால் மிகையல்ல. Djordje Stojiljkovic-ன் ஒளிப்பதிவு கிராபிக்ஸ் காட்சிகளின் நம்பகத்தன்மையை கூட்டும் அளவுக்கு கச்சிதமாக இருக்கிறது. க்ரீன் மேட்டில் எடுக்கப்பட்டதே தெரியாத அளவுக்கு உழைத்த விஎஃப்எக்ஸ் குழு மற்றும் கலை இயக்குநருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

தொடக்கம் முதல் இறுதி வரை திரைக்கதையில் எந்த சுவாரஸ்ய அம்சங்களையும் சேர்க்காமல் க்ளைமாக்ஸில் ஒட்டுமொத்தமாக உழைப்பை கொட்டியிருப்பது விழலுக்கு இறைத்த நீர். இரண்டாம் பாகத்தில் தான் படத்தின் மெயின் கதையே தொடங்கப் போகிறது என்றால் நேரடியாக இரண்டாம் பாகத்தையே எடுத்திருக்கலாமே? எதற்காக இப்படி ஒரு சலிப்பூட்டும் பிரம்மாண்ட முயற்சி என்ற கேள்வி எழாமல் இல்லை.

கிராபிக்ஸ், மேக்கிங் என வியக்க வைத்தாலும், நம்மை வேறு எதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் மூன்று மணி நேரம் கட்டிப் போடும் மேஜிக்கை நிகழ்த்த தவறியிருக்கிறது இந்த ‘கல்கி 2898 ஏடி’.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles