கேரள மாநில பெண்களை மையமாக வைத்து தி கேரளா ஸ்டோரி திரைப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்று கதை களம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் படத்தை திட்டமிட்டபடி திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. இதற்கு தமிழகத்திலும் எதிர்ப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து திட்டமிட்டபடி தி கேரளா ஸ்டோரி படம் வெளியானது. சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது. சென்னை அண்ணாநகர் வி.ஆர். மால், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, விருகம்பாக்கம் ஐநாக்ஸ், வேளச்சேரி பி.வி.ஆர். உள்ளிட்ட அனைத்து தியேட்டர்களிலும் தி கேரளா ஸ்டோரி படம் வெளியானது. இந்நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் நேற்று மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட நிலையில் நாளை முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சினை ,படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.