காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்ட ராட்சத சுறா ஒன்று, ஆழ் கடலிலிருந்து பாரிஸ் நகரத்துக்குள் ஓடும் செய்ன் ஆற்றுக்குள் புகுந்துவிடுகிறது.
மறுபுறம், பிரபலமான நீச்சல் போட்டியை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக இருக்கிறது பாரிஸ் மேயர் தலைமையிலான குழு.
சுறா விவகாரம் மேயரின் காதுகளுக்குச் செல்ல, அதை நம்ப மறுக்கும் அவர் நீச்சல் போட்டியை நடத்தியே தீருவேன் என உறுதியாக இருக்கிறார்.
சுறாவைக் கொல்லாமல், அதைக் காப்பாற்றி கடலில் விட, ஆராய்ச்சியாளர் சோபியாவும், காவல்துறையும் களமிறங்க, அது கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக மாறுகிறது.
காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள், குப்பைத் தொட்டியாக்கப்படும் கடல், அவற்றால் பாதிப்பிற்குள்ளாகும் கடல் வாழ் உயிரினங்கள் என அறிவியல் ரீதியாக ஆரம்பிக்கிறது படம். ‘ரிவர் போலீஸ்’ என்கிற பாரிஸ் காவல்துறை பிரிவினர், பாரிஸ் நகரத்தின் நீர் வழிப்பாதைகள் போன்றவை சுவாரஸ்யத்தைத் தருகின்றன.