NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விபத்தில் சிக்கிய அமிதாப் பச்சன்

பாலிவுட் திரையுலகில் பிக் பி என அழைக்கப்படுபவர் நடிகர் அமிதாப் பச்சன். இதுவரை நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார் அமிதாப் பச்சன். தற்போது தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் Project K என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைத்ராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார் நடிகர் அமிதாப் பச்சன். சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நடிகர் அமிதாப்புக்கு வலது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது விலா எலும்பு முறிவு ஏற்பட்டு தசை பகுதியும் கிழிந்ததாக கூறப்படுகிறது..

இதனால், படப்பிடிப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டு ஹைத்ராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் அமிதாப் பச்சன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சி.டி. ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.இதையடுத்து மும்பை திரும்பிய நடிகர் அமிதாப் பச்சன் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். தனக்கு விபத்து ஏற்பட்ட தகவலை நடிகர் அமிதாப் பச்சனே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் தனக்கு மூச்சு விடும்போதும், நடந்து செல்லும்போதும் வலி ஏற்படுவதாகவும் கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.

இதனால், இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகலாம் என்றும் வலிக்கான மருந்துகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார். ரசிகர்கள் யாரும் தன்னை பார்க்க வரவேண்டாம் என்றும் அமிதாப் பச்சன் கேட்டுக் கொண்டுள்ளார். அமிதாப் பச்சன் விபத்தில் சிக்கி எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டுள்ள தகவலை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share:

Related Articles