நாட்டில் தற்போது நிலவும் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டட நிர்மாணக் கைத்தொழில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதாக கட்டட நிர்மாணத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் 20,000 ரூபாவாக இருந்த ஒரு க்யூப் மணலின் விலை 30,000 ரூபாவரை அதிகரித்துள்ளதாக கட்டட மூலப்பொருட்கள் விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்துச் சென்றதால் மணல் அகழ முடியாமல் போனமையின் காரணமாகவே இவ்வாறு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மணல் தட்டுப்பாடு காரணமாக சிறிய மற்றும் பாரிய அளவிலான நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் சில கட்டட நிர்மாண மூலப்பொருட்கள் விநியோகஸ்தர்கள் அவர்களின் வியாபார நிலையங்களை கூட மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் அரசு விரைவாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை உடன் எடுக்கவேண்டுமென கட்டட நிர்மாண மூலப்பொருள் விநியோகஸ்தரொருவர் தெரிவித்துள்ளார்.