NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அடுத்த 10 ஆண்டுகளில் எரிபொருள் தேவை பல மடங்கு அதிகரிக்கும்- ஆய்வில் தகவல்

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு எரிபொருள் தேவை அடுத்த 10 ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு அதிக மக்கள் தொகை நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அதேவேளையில், குழந்தைகள் பிறப்பு விகிதம் இந்தியாவில் சரிந்துள்ளது.

இந்த நிலையில், மக்கள் தொகை வளர்ச்சியால், அடுத்த 10 ஆண்டுகளில் பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் எரிபொருள் தேவை அதிகரிக்கும் என்று சர்வதேச எரிபொருள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக, நிலக்கரியை அதிகம் பயன்படுத்தும் நாடுகள் வரிசையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. 2019-2020ல் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பது 71 சதவீதமாக இருந்த நிலையில், 2023-24ல் 75 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அடுத்த சில ஆண்டுகளுக்கு எரிபொருள் உற்பத்தியில் நிலக்கரி முக்கிய பங்காற்றும் என்றும், 2030ம் ஆண்டுக்குள் புதிய நிலக்கரி மின் உற்பத்தி மையங்கள் மூலம் 60 ஜிகா வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாடுகள் தொடரும் பட்சத்தில், 2070ல் பூஜ்யம் மாசுபாடு என்ற இலக்கை எட்டி விட முடியும் என்று நம்பப்படுகிறது.

மேலும், 2035ம் ஆண்டு வரையில் தினமும் 12,000 கார்கள் பயன்பாட்டிற்கு வர இருப்பதாகவும், இரும்பு உற்பத்தி 70 சதவீதமும், சிமெண்ட் விற்பனை 55 சதவீதமும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஏ.சி., 4.5 மடங்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மின்சாரத் தேவைகளின் பயன்பாடு அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவின் எரிபொருள் தேவை 35 சதவீதம் அதிகரிக்கும் என்றும், அதேவேளையில், 2035ல் மின்உற்பத்தி தயாரிப்பு 1,400 ஜிகாவாட்டாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles