காட்டன் மில் ஓனரான ரங்கநாயகி (ராதிகா) குடும்பத்தில் தொடர்ந்து பல்வேறு துர்சம்பவங்கள் நடக்கின்றன. அவர்களுக்கு சொந்தமான காட்டன் மில்லில் தீ விபத்து நிகழ்கிறது. ஒரு விபத்தில் ரங்கநாயகியின் இளைய மகளால் (லட்சுமி மேனன்) நடக்க முடியாமல் போகிறது.
அவரது மூத்த மகள் வேறு மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார். தங்கள் குலதெய்வத்தை ரங்கநாயகியின் குடும்பம் மறந்து போனதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக அவர்கள் குடும்ப சாமியார் (ராவ் ரமேஷ்) சொல்வதைக் கேட்டு சந்திரமுகி பங்களா இருக்கும் ஊருக்கு செல்கின்றனர்.
வேற்று மதத்தை சார்ந்தவரை திருமணம் செய்த மகளுக்கு பிறந்த குழந்தைகளையும் அங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று சாமியார் கூறியதால், அந்தக் குழந்தைகளும் அவர்களது கார்டியனான பாண்டியனும் (ராகவா லாரன்ஸ்) அந்த ஊருக்கு வருகின்றனர்.
சந்திரமுகி பங்களாவின் தற்போதைய ஓனர் முருகேசனிடம் (வடிவேலு) அந்த வீட்டை குத்தகைக்கு எடுத்து தங்கும் அவர்களை, தங்கள் குலதெய்வக் கோயிலில் பூஜை செய்ய விடாமல் தடுக்கிறார் ஒரிஜினல் சந்திரமுகி .
சந்திரமுகியை தடுத்து ரங்கநாயகியின் குடும்பம் குலதெய்வம் கோயிலில் பூஜை செய்ததா என்பதே மற்றவை.
படத்தின் தொடக்கத்தில் ராதிகாவின் குடும்பக் களேபரங்கள் முடிந்து லாரன்ஸின் அறிமுகக் காட்சி.
அவர் பராமரிப்பில் இருக்கும் இரண்டு குழந்தைகளையும் யாரோ கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டுகையில், பைக்கிலே பறந்து சென்று பஸ்ஸின் பின்பக்கத்தை உடைத்து உள்ளே சென்று, அடுத்த நொடி இரண்டு குழந்தைகளையும் அலேக்காக இரு கைகளில் பிடித்தபடியே பஸ்ஸின் முன்பக்கத்தை உடைத்துக் கொண்டு பைக்கோடு வெளியே பறந்து வருகிறார் லாரன்ஸ்.
அடுத்து வடிவேலு. முந்தைய பாகத்தில் வந்த அதே முருகேசன் பாத்திரத்தில் வருகிறார். ஆனால், காமெடி என்ற பெயரில் வடிவேலுவும் லாரன்ஸும் செய்பவை சிரிப்புக்கு பதில் எரிச்சலை மட்டுமே வரவைக்கின்றன.
அதிலும் முந்தைய பாகத்தில் “பேய் இருக்கா இல்லையா?” என்று வரும் கிளாசிக் காமெடியை வேறு மாதிரி எடுக்கிறேன் என்று ‘பேய்க்கு வயசாகுமா? ஆகாதா?’ என்று ஒரு நீ….ண்ட காட்சியை வைத்திருக்கிறார்கள்.
முதல் பாகத்தில் உண்மையான சந்திரமுகி யாரென்று பார்வையாளர்களுக்கு தெரிவதை திசை திருப்பவாவது நயன்தாரா தேவைப்பட்டார். ஆனால், இதில் நாயகி மஹிமா நம்பியாருக்கு அந்த வேலையும் இல்லை. லட்சுமி மேனன் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
இந்த திரைப்பட சிறுவர் முதல் பெரியவர் வரை பார்த்து ரசிக்க கூடிய ஒரு திரைப்படம்.