NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நல்லூர் திருவிழாவில் நடைமுறை மாற்றம்?

யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க கந்தசுவாமி ஆலய மகோற்சவ காலத்தில், ஆலயத்தை சூழவுள்ள வீதிகள் பொது போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு , மூடப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாண நீதிமன்றில் சில தரப்பினர் வழக்கு தொடரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ காலத்தில் முருகப்பெருமான் வலம் வருகின்ற வெளிவீதிச் சூழலில் புனிதத்தையும், பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு யாழ். மாநகர சபையிடம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

காலங்காலமாக நல்லூர் ஆலய மகோற்சவ காலத்தில் யாழ் மாநகர சபையானது தனது பணிகளை செவ்வனே சிறப்பாக நிறைவேற்றி வந்திருக்கிறது.

ஆனால் இவ்வருடம் சிலரின் அழுத்தங்கள் காரணமாக, காலங்காலமாக பேணப்பட்டு வந்த நடைமுறைகளை மாற்ற முயற்சிப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

தன் முன் அனைவரும் சமம் என்ற நல்லூர் கந்தப் பெருமானுடைய தனித்துவத்தை பாதிக்கும் வகையில், ஒருசிலரை முருகப்பெருமான் வலம்வரும் வீதியில் பாதணிகளுடன் அனுமதிப்பது பல்லாயிரக்கணக்கான முருக அடியார்களின் மனதைப் புண்படுத்தும் செயலாகும்.

அத்துடன் அங்கப்பிரதிஸ்டை செய்கின்ற அடியவர்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும்.

அத்துடன் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் நடமாடுகின்ற வெளிவீதியில் அத்தியாவசியமான வாகனங்களை தவிர ஏனைய வாகனங்களை அனுமதிப்பது அடியவர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதோடு பக்தர்களிடையே பாகுபாட்டையும் ஏற்படுத்தும்.

ஆகவே காலங்காலமாக பேணப்பட்டு வந்த அதே நடைமுறைகளை இவ்வருட நல்லூர் மகோற்சவ காலத்திலும் நடைமுறைப்படுத்துமாறு யாழ் மாநகரசபையை வேண்டிக்கொள்கிறேன் – என்றார்.

அதேவேளை நல்லூர் ஆலய மகோற்சவ காலமான 27 நாட்கள் ஆலய சூழலில் உள்ள வீதிகள் மூடப்பட்டு இருக்கும்.

வீதி தடைகளை தாண்டி வாகனங்களை கொண்டு செல்லவோ , பாதணிகள் அணிந்து செல்லவோ அனுமதிக்கப்படுவதில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles