NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இணைய மூலம் நிதி மோசடி – கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் குறித்து சீனத் தூதரகம் விசேட அறிக்கை!

இணையவழி நிதி மோசடி தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் குறித்து கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இணையவழி மோசடியில் கைதுசெய்யப்பட்டவர்கள் குறித்து சீனா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதுடன், இலங்கை சட்ட விதிமுறைகளுக்கினங்க அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சீனா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த சம்பவம் இரு நாட்டு மக்களின் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமல்லாமல், சீனாவின் நற்பெயரை கடுமையாக பாதிப்பதாகவும், இரு நாடுகளுக்கிடையேயான பாரம்பரிய நட்புறவை பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சந்தேக நபர்களை சட்டப்படி அவர்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீனத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சீன அரசாங்கம் மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது, அத்துடன் இணையவழி மோசடிகளைத் தடுக்கும் பாதையைத் தொடர்ந்து ஆராய்ந்து, பல்வேறு பணிகளை ஆழமாக முன்னெடுத்துச் செல்கிறது.

2021 ஆம் ஆண்டில் சீனாவில் இணையவழி மோசடி குறித்து தீர்க்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட ஐந்து மடங்கு அதிகம்.

இன்று உலகில், இணையவழி மோசடி குற்றங்கள் பல்வேறு நாடுகளில் வேகமாக வளர்ந்து பரவி வருகின்றன,

மேலும் அவை உலகளாவிய அச்சுறுத்தலாகவும், மாறியுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் இத்தகைய மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கு மியான்மர், கம்போடியா உள்ளிட்ட பல நாடுகளுடன் பலனளிக்கும் ஒத்துழைப்பை சீனா மேற்கொண்டுள்ளது.

குறிப்பிடத்தக்களவு கட்டுப்படுத்தப்பட்டாலும், சில குற்றக் குழுக்கள் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஏனைய நாடுகளுக்குச் சென்றன எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், இணையவழி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததினால் சில இலத்திரனியல் மோசடிக் கும்பல்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்து தொடர்ந்தும் செயற்படுவதாக சீனத் தூதரகம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Share:

Related Articles