இந்தோனேசியா – ஜாவா தீவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் காணமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகாபூமி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால், மலையோர குக்கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்ததால், 170க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதாகவும் அவ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் 172 கிராமங்களை அழித்துள்ளதுடன், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக அரசாங்க முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 31 பாலங்கள், 81 சாலைகள் மற்றும் 539 ஹெக்டேர் நெல் வயல்கள் அழிந்;துள்ளதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.