பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அரச போசாக்கு வேலைத்திட்டத்தை மேலும் திட்டமிட்ட வகையில் நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தவும், ஆண்டுக்கான உயர்ந்தபட்ச எண்ணிக்கையாக 1.5 மில்லியன் மாணவர்கள் பயனடையக்கூடிய வகையில் வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ஒன்று தொடக்கம் ஐந்து வரையான வகுப்புக்களில் நாடளாவிய ரீதியிலுள்ள 100 கல்வி வலயங்களில் 8,956 பாடசாலைகளில் உள்ள மாணவர்களை உள்ளடக்கி, பாடசாலை உணவு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.