2026ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல், கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம், பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கல்விக் கொள்கைக் குழுவின் பிரதிநிதிகளுடன் நேற்று அலரி மாளிகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, புதிய கல்வி சீர்திருத்தத்தினூடாக அழகியல் பாடங்கள், சுகாதாரம் மற்றும் உடற்கல்வி ஆகியவை நீக்கப்படாது எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கல்வியை மாற்றுவோம், இலங்கையை மாற்றுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு குறித்த கலந்துரையாடலின் போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாடத்திட்டத் திருத்தம், பாட உள்ளடக்கம், கல்வி, பாடசாலைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர் பயிற்சி, அணுகுமுறை, கல்வித் துறையில் தொழில்முறை விருத்தி, மதிப்பீட்டு முறைகளைச் சீர்திருத்துதல் மற்றும் கல்விக் கொள்கைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.