சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்கு சென்ற பெண்ணொருவர் நல்லதண்ணி – சிவனொளிபாத மலை வீதியில் ஜப்பான் அமைதி விகாரைக்கு கீழே அமைந்துள்ள சிவப்பு பாலம் அருகில் பெண்ணொருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்குரெஸ்ஸ, வல்பிட்ட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த பெண்ணை நல்லதன்னிய பொலிஸார் மற்றும் மவுஸ்ஸாகலை இராணுவ முகாமின் அதிகாரிகள் நல்லதன்னி பகுதிக்கு கொண்டு சென்று, பின்னர் நல்லதண்ணி சுகாதார சேவைகள் மையத்தின் ஆம்புலன்ஸ் மூலம் மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் தனது கணவர், குழந்தைகள் மற்றும் கிராமவாசிகள் குழுவுடன் யாத்திரை பஸ்ஸில் ஸ்ரீ பாத யாத்திரைக்காக சென்றுள்ள நிலையில், நேற்று (04) சிவனொளிபாத மலை யாத்திரையை முடித்துவிட்டு நல்லதண்ணி பகுதிக்கு மீண்டும் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.