(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் ஆராதனையின் போது தேவாலயத்திற்குள் நுழைய முயன்ற நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கரையோரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை – அகலவத்தை பிரதேசத்தில் நிரந்தர வதிவிடமாகவும், கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட 46 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, தேவாலயத்துக்குள் பாடல்களை கேட்க வேண்டும் என்பதற்காக வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189வது வருடாந்த திருவிழா எதிர்வரும்13ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், நாளாந்த ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், தேவாலயத்திற்குள் திடீரென நுழைய முயன்ற குறித்த நபரை பிரதான வாயிலில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, குறித்த சந்தேக நபரிடம் இருந்து இரண்டு தேசிய அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.