NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் சேவை காலத்தை நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் சேவை காலத்தை 63 வயது வரை நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் நேற்று (27) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக குறைக்கும் அமைச்சரவை தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

176 வைத்தியர்களால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் எம்.ஏ.ஆர்.மரிக்கார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த மனு மீதான விசாரணையின் போது, விசேட வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதை 63ஆக அதிகரிக்க சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக, சுகாதார அமைச்சின் செயலாளரிடமிருந்து தனக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 30ஆம் திகதிக்குள் பிரேரணையின் மூலம் நீதிமன்றுக்கு இந்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி, சஞ்சீவ ஜயவர்தன, சுகாதார அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

எனினும் சில விசேட வைத்தியர்கள் இம்மாதம் 30 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள நிலையில், இந்த மனுவை இன்றைய தினமும் (28.06.2023) பரிசீலிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இதன்படி, குறித்த மனுவை இன்றைய தினமும் பரிசீலிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles