NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விம்பிள்டனில் ஜோகோவிச்சை வீழ்த்தி சம்பியனானார் ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரஸ்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரஸ் சம்பியனனார்.

நேற்று (16) நடைபெற்ற இறுதிப்போட்டியில் சேர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சை 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 விகிதத்தில் அல்காரஸ் தோற்கடித்தார்.

20 வயதேயான கார்லோஸ் அல்காரஸுக்கு இது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டமாகும்.

36 வயதான நோவாக் ஜோகோவிச் உலகின் 2ஆம் நிலை வீரர். ஆண்களில் 23 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர். இவ்வருடத்தின் அவுஸ்திரேலியஇ பிரெஞ்சு பகிரங்க சுற்றுப்போட்டிகளிலும் அவரே சம்பியனானார்.

விம்பிள்டனில் 7 தடவைகள் ஜோகோவிச் சம்பியனாகியவர். 2018 முதல் தொடர்ச்சியாக 4 தடவைகள் விம்பிள்டன் சம்பியனாகிய அவர், இம்முறை தொடர்ச்சியான 5 ஆவது விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை குறி வைத்திருந்தார். இம்முறை அவர் சம்பியனானால்இ 8 விம்பிள்டன் பட்டங்களை வென்ற சுவிட்ஸர்லாந்து வீரர் ரோஜர் பெடரரின் சாதனையை சமப்படுத்தியிருப்பார். இதன் மூலம் 24 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற அவுஸ்திரேலிய வீராங்கனை மார்கரெட் கோர்ட்டின் சாதனையையும் ஜோகோவிச் சமப்படுத்தியிருப்பார்.

எனினும் அவரை இளம் வீரர் அல்காரஸ் கடும் போராட்டத்தின் பின் வெற்றிகொண்டார். 4 மணித்தியாலங்கள், 42 நிமிடங்கள் இப்போட்டி நீடித்தது.

விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்ற சம்பியனான 3 ஆவது ஸ்பானிய வீரர் அல்காரஸ் ஆவார்.

ஸ்பானிய வீரர்களான 1966 ஆம் ஆண்டு மனுவெல் சன்டானாவும், 2008, 2010 ஆம் ஆண்டுகளில் ரபாயெல் நடாலும் இப்பட்டத்தை வென்றிருந்தனர்.

இதற்குமுன் 2022 ஆம் ஆண்டு அமெரிக்கப் பகிரங்க சுற்றுப்போட்டியில் அவர் சம்பியனாகியிருந்தார்.

ஜாகோவிச்சைவிட 16 வயது இளையவரான அல்காரஸ், போட்டியின் பின்னர் ஜோகோவிச் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், நீங்கள் எனக்கு மிகுந்த உந்துதலாக இருந்தீர்கள். உங்களை பார்த்து நான் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தேன்’ என்றார்.

அல்காரஸுக்கான சம்பியன் கிண்ணத்தை வேல்ஸ் இளவரசி கெத்தரின் கையளித்தார்.

ஆல்காரஸ் இவ்வெற்றிக்குத் தகுதியானவர் என நோவாக் ஜோகோவிச் பாராட்டினார்.

காயம் காரணமாக இப்போட்டிகளில் பங்குபற்றாத ரபாயெல் நடாலும், அல்காரஸுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

விம்பிள்டனில் தொடர்ச்சியான 34 போட்டிகளில் வெற்றியீட்டிய பின்னர் இப்போது முதல் தடவையாக ஜோகோவிச் தோல்வியுற்றுள்ளார். விம்பிள்டன் இறுதிப்போட்டிகளில் 2013ஆம் ஆண்டின் பின்னர் அவர் தோல்வியுற்றமை இதுவே முதல் தடவையாகும்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles