(யோ. தர்மராஜ்)
நாட்டின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்ச வாக்குகளை பெற்று, பாராளுமன்றத்திலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தையும் கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மக்கள் கிளர்ச்சியால் இடைநடுவே பதவி விலகியதைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளால் நாடு பாரிய பொருளாதார வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்பட்டதுடன், நாட்டில் எரிபொருள், எரிவாயு என அனைத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் வீதிக்கு இறக்கு போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
பொருளாதார நெருக்கடிக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்குமாறுக் கோரி வீதிக்கு இறங்கிய மக்கள், ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கத்தையும் பதவியில் இருந்து வெளியேற்றிய மக்கள் போராட்டமாக வரலாற்றில் இடம் பிடித்தது.
ஜனாதிபதி செலயகத்துக்கு முன்பாக சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ‘கோட்டா கோ கம’ முதல் ‘மைனா கோ கம’ வரையான பல போராட்டக்களங்களை உருவாக்கியது.
இந்த போராட்டங்கள் மழை வெயில் பாராது 100 நாட்களுக்கும் மேலாகச் சென்று கடந்த வருடம் மே 9 ஆம் திகதி நடந்த மக்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதுடன், முழு அமைச்சரவையும் பதவி விலகியது.
இதனைத் தொடர்ந்து மே 13ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறுக் கோரி போராட்டக்காரர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
கோட்டாபய ராஜபக்ஷ அதற்கு சற்றேனும் செவி சாய்க்காதமையால் ஜூலை 9ஆம் திகதி முழு நாட்டு மக்களும் கொழும்புக்குள் நுழைந்தால், இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அரசின் பிரதான அலுவலகங்களை மக்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எவ்வித மாற்றுவழிகளும் இன்றி, இலங்கையில் இருந்து வெளியேறி மாலைத்தீவு ஊடாக சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார்.
பாதுகாப்பாக அங்கு தஞ்சமடைந்த கோட்டாபய ராஜபக்ஷ, தாம் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர், ஜூலை 14 ஆம் திகதி பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதியின் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டால், பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற சட்டத்துக்கு அமைய கடந்த ஜூலை 20ஆம் திகதி புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க, ஆளுந்தரப்பிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்பட்ட டளஸ் அழகப் பெரும மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூவர் போட்டியிட்டன.
இறுதியில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் சாணக்கியத்தால் 134 வாக்குகளை பெற்று 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அவர் தெரிவானார்.
இதனைத் தொடர்ந்து 2022 ஜூலை 21ஆம் திகதி நாட்டின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக பதவி ஏற்றுக் கொண்டார்.
இதனையடுத்து, 48 வருடகால அரசியல் வாழ்க்கையில் ஒரு முறைக்கூட ஜனாதிபதி கதிரையில் அமர முடியாத, தொடர் தோல்வியை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க, இம்முறை மக்களாள் நிராகரிக்கப்பட்டு, கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியலில் ஒன்றை நபராக பாராளுமன்றத்துக்கு வந்து, பிரதமராகி, பின்னர் நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக சிம்மானம் ஏறி வரலாற்றில் இடம்பிடித்தார்.
இவ்வாறு பாராளுமன்றத்தின் ஊடாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு, இன்றுடன் ஒரு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.
ஜனாதிபதியாக ரணில் பதவி ஏற்றுக் கொண்ட ஒரு வருட காலத்துக்குள் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்துள்ளரா? என்பதை பார்க்கும் போது, பால்மா, எரிவாயு, எரிபொருள் என அத்தியாவசிய தேவைகளுக்காக பல நாள் வரிசையில் நின்ற வரிசை யுகம் மாற்றப்பட்டது.
பொருட்களின் விலைகள் குறைப்பு, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள், உலக நாடுகள் உதவிகள், அரசியல் ஸ்தீரத்தன்மை என பல விடயங்களை செய்திருந்தாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் மனதை வென்றுள்ளரா என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லாமலே இருக்கின்றன.
ஜனாதிபதியாக அவர் பதவி ஏற்கும் போது பாரிய சவால்கள் இருந்த போதிலும், அவற்றை முறியடித்து, தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டாலும் தற்போது முன்னெடுக்கப்படும் கடன்மறுசீரமைப்பு உள்ளிட்ட சில விடயங்கள் மக்கள் மத்தியில் மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய ஒரு வருட காலத்தில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தரா? 2024 ஆம் ஆண்டு இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தல் வரை மக்களுக்கான முடிவுகளை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஒருவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் மீண்டும் ஜனாதிபதி சிம்மாசனத்தில் அமர வைப்பார்களா என்பது எதிர்வரும் சில மாதங்களே தீர்மானிக்கும் என்பதே யதார்த்தம்.





