நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக காங்கேசன்துறை – காரைக்கால் இடையே கப்பல் சேவையை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தது.
எனினும் தற்போது காங்கேசன்துறை – நாகப்பட்டினம் என்ற அடிப்படையில் பயணப்பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் பயணிகள் முனையம், சுங்க அலுவலகம் போன்றவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை வடக்கு மாகாணத்திற்கான தூரம் 110 கிலோமீட்டர்களாகும்.
எனவே நாகப்பட்டினத்தில் இருந்து கப்பலில் சென்றால் வெறும் 4 மணிநேரத்தில் காங்கேசன்துறையை அடைந்துவிடலாம் என கூறப்படுகிறது.