(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை ஆகிய நீரேந்து பகுதிகளில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலையினால் இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நேற்று (09) காலை 6 மணியளவில் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து 49 அடிகளாலும், காசல்ரி நீர்த்தேக்கத்தின் அடிமட்டம் 155 அடியிலிருந்து 35 அடிகளாலும் குறைந்துள்ளதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
கெனியோன், விமலசுரேந்திர, லக்ஷபான, புதிய லக்ஷபான, பொல்பிட்டிய சமனல நீர்மின் நிலையங்களில் இரண்டு நீர்த்தேக்கங்களில் இருந்து பெறப்படும் நீரின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், தற்போது அந்த நீர்மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி நடைபெற்று வருவதாகவும் மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
அந்த மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட பின்னர் கினிகத்தேன பொல்பிட்டிய பிரதேசத்தில் இருந்து களனி ஆற்றுக்கு நீர் விடப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.